திமுகவுடன் கூட்டணி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிகவும், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேமுதிக இடம்பெறும் கூட்டணி குறித்து ஜனவரி மாதமே அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

மேலும் தேமுதிக கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேமுதிகவும், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்த கூட்டணி அமைந்திருக்க வேண்டும்.

எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர் என்று ஒரு குழு அமைத்து முடிவு செய்து பின்பு அறிவிக்கப்படும். திமுகவுடன், தேமுதிக முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளது. இரண்டு கழகத்தை சேர்ந்த அனைவரும் மிக சந்தோஷத்துடன் இந்த கூட்டணியை வரவேற்று உள்ளார்கள். ராஜ சபா இடத்தை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். கூட்டணி குறித்து யூடியூப் மற்றும் பத்திரிக்கையாளர் தவறான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ஆனால் இன்று கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.