31.1 C
Chennai
May 23, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2023-ம் ஆண்டு இந்திய விளையாட்டு துறையில் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள்!

இந்தியர்கள் விளையாட்டு அரங்கில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர். உலகக் கோப்பையின் போது தனது 50வது ஒரு நாள் சர்வதேச சதத்தை விராட் கோலி அடித்ததில் தொடங்கி ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்தது போன்ற பல நிகழ்வுகளும் அடங்கும். அதேபோல் நாடே வேதனை அடையும் வகையிலும் பல நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றின் ஒரு சிறிய தொகுப்பை இங்கே காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணி:

கிரிக்கெட் தரவரிசையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி வலுவானதாக விளங்கியது. அதாவது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்ததது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் அணி முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. எட்டாவது முறையாக ஆசியக்கோப்பையையும் வென்றது. உலகக் கோப்பையில் 10 போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பையை தவறவிட்டது.

சாதனைகளை முறியடித்த கோலி, ஷமி:

நடப்பாண்டில் அரங்கேறிய ஒருநாள் உலகக் கோப்பையானது கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோரால் நினைவு கூறப்படுகிறது. 35 வயதான கோலி 2023 உலகக் கோப்பையில் தனது 50 வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  அதோடு, ஒரே உலகக் கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மறுமுனையில், முகமது ஷமி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நான்குமுறை ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்தார். இது எந்த ஒரு பந்து வீச்சாளராலும் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையுடன், இந்திய வீரர்களில் சிறந்த தனிநபர் பந்துவீச்சு என்ற பெருமையையும் பெற்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற தோனியின் சிஎஸ்கே படை

ஐபிஎல் கிரிக்கெட் என்றதும் அனைவரது நெஞ்சங்களிலும் சட்டென நினைவுக்கு வருவது தோனியும், சிஎஸ்கே அணியும் தான். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்றாலும் இந்த காம்போ ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. 2023-ம் ஆண்டில் நடைபெற்ற சீசனில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணிக்கு தேவையான வெற்றி ரன்களை விளாசி இருந்தார் ஜடேஜா. சென்னை சாம்பியன் பட்டம் வென்றதும் தோனி, ஜடேஜாவை அப்படியே தனது தோளில் சுமந்து கொண்டாடினார்.

குஜராத் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி ரிசர்வ் தினத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மைதானத்தில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றும் பணி சர்ச்சை ஆனது.

2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சென்னை அணியின் கேப்டன் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் பெறுவதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். தோனி களம் காணும் போது சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களின் கூக்குரலால் விண்ணை பிளந்தது. 2024 ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈட்டி எறிதலில் நாயகன் நீரஜ்

இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தற்போதைய ஒலிம்பியனாகவும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், 26 வயதான அவர் நடப்பாண்டு தொடக்கத்தில் நடந்த உலக தடகள சாம்பியன் ஷிப்பில் (WAC) இந்தியாவின் முதல் பதக்கத்தையும் வென்றார். மேலும், கிஷோர் குமார் ஜெனா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

26 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். 2022-ல் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இப்போது அவரது இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.

பேட்மிண்டன் இரட்டையர்கள்

பேட்மிண்டன் இரட்டையர்களான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ரங்கிரெட்டி ஆகியோர், சர்வதேச அரங்கில் அவர்களது அற்புதமான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனுடன் ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்தையும் திகைக்க வைத்தனர். பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) சார்பில் நடத்தப்பட்ட சுவிஸ் ஓபன், இந்தோனேசியா ஓபன் மற்றும் கொரியா ஓபனில் பட்டங்களை வென்று அசத்தினர்.

ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தையும், ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கத்தையும் கொண்டு வந்த பெருமை இந்த ஜோடிக்கு உண்டு. அக்டோபரில், BWF தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய பேட்மிண்டன்  இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.

FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி ஒன்பதாவது SAFF பங்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது. தொடர்ந்து FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் குவைத்தை 1-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்தியது.   22 ஆண்டுகளில் வெளிநாட்டில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நாட்டின் முதல் வெற்றியாகும். இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கத்தாரை 3-0 என வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை

ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் புது வரலாறு படைத்தது. வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று அசத்தினர். இந்திய ஹாக்கி ஆண்கள் அணி உட்பட பல இந்திய விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இந்திய அணி 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்றது. இது இரண்டு போட்டிகளிலும் நாட்டின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.

செஸ் இளவரசர் பிரக்ஞானந்தா

அஜர்பைஜானின் பாகுவில் நடந்த FIDE உலகக் கோப்பையில் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா,  இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனிடம் வெற்ரி வாய்ப்பை இழந்தார்.  டை-பிரேக்கில் 1.5-0.5 என்ற கணக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். செஸ் சாம்பியன் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றது உட்பட மிகப்பெரிய சாதனைகளை படைத்தார்.

2023-ம் ஆண்டில் உயிரிழந்த இந்திய விளையாட்டு வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் மொகமது ஹபீப், 32 வயதான அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி ஆகியோர் நடப்பு ஆண்டில் உயிரிழந்தனர்.

பிரிஜ் பூஷண் VS சாக்‌ஷி மாலிக் – மல்யுத்தம்

ஜனவரியில் முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. அவர் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தியும், விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டம் மேற்கொண்டனர். 

டிசம்பர் மாதம் மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி அறிவித்தார். பஜ்ரங் புனியா, தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுத்தார். இந்த சூழலில் புதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

விருதுகள் 2023

அர்ஜுனா விருது

ஓஜஸ் பிரவின் தியோட்டலே, அதிதி கோபிசந்த் சுவாமி – வில்வித்தை
ஸ்ரீசங்கர் எம், பருல் சவுத்ரி – தடகளம்
முகமது ஹுசாமுதீன் – குத்துச்சண்டை
ஆர் வைஷாலி – செஸ்
முகமது ஷமி – கிரிக்கெட்
திவ்யகிருதி சிங், அனுஷ் அகர்வாலா – குதிரையேற்றம்
திக்ஷா டாகர் – கோல்ஃப்
புக்ரம்பம் சுசீலா சானு, கிரிஷன் பகதூர் பதக் – ஹாக்கி
ரிது நேகி, பவன் குமார் – கபடி
நஸ்ரீன் – கோ-கோ
பிங்கி – புல்வெளி கிண்ணங்கள்
ஈஷா சிங், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – படப்பிடிப்பு
ஹரிந்தர் பால் சிங் சந்து – ஸ்குவாஷ்
அய்ஹிகா முகர்ஜி – டேபிள் டென்னிஸ்
அண்டிம், சுனில் குமார் – மல்யுத்தம்
நௌரெம் ரோஷிபினா தேவி – வுஷு
ஷீத்தல் தேவி – பாரா வில்வித்தை
இல்லூரி அஜய் குமார் ரெட்டி – பார்வையற்ற கிரிக்கெட்
பிராச்சி யாதவ் – பாரா கேனோயிங்

துரோணாச்சார்யா விருது 2023

லலித் குமார் – மல்யுத்தம்
ஆர்.பி.ரமேஷ் – செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி – பாரா தடகளம்
சிவேந்திர சிங் – ஹாக்கி
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் – மல்லகாம்ப்

வாழ்நாள் விருதுகள்

ஜஸ்கிரத் சிங் கிரேவால் – கோல்ஃப்
பாஸ்கரன் இ – கபடி
ஜெயந்த குமார் புஷிலால் – டேபிள் டென்னிஸ்

வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருது 2023:

மஞ்சுஷா கன்வார் – பேட்மிண்டன்
வினீத் குமார் சர்மா – ஹாக்கி
கவிதா செல்வராஜ் – கபடி.

  • திருப்பதி கண்ணன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading