26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??


ஜெனி

கட்டுரையாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரைச் சொன்னாலே அனைவரின் மனதிலும் தோன்றும் எண் 7, முகம் எம்.எஸ்.தோனி. ’கேப்டன் கூல்’ என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் வார்த்தைகள் 2023 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேவுக்கு பெற்றுத் தருமா?? விரிவாக பார்க்கலாம்….

ஐபிஎல் வரலாற்றில் எழுத்துக்களிலும், ரசிகர்களின் மனங்களிலும் நீக்கமுடியாத ஒரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. செல்லும் மைதானம் எங்கும் மஞ்சள் படை. தோனி… தோனி… என்ற ஆர்ப்பரிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த சிறந்த முடிவு, தோனியை தன்னுடைய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்தது என்று ஐபிஎல் ரசிகர்கள் கூறும் அளவுக்கு தோனி மீதான மோகம் உச்சபட்ச நிலையில் இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தோனிக்கு ஏன் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் என்ற எண்ணம் எழுவது வழக்கம். கேப்டன் கூல் என்ற பெயருக்கு ஏற்ப இக்கட்டான சூழ்நிலையில் நிதானமாக முடிவெடுக்கும் திறன், ஹெலிகாப்டர் ஷாட், வின்னிங் ஷாட், விக்கெட் கீப்பிங், தன்னடக்கம், சக வீரர்களை ஊக்குவித்தல், குறும்புத்தனம் என தோனியை விரும்புவதற்கான அடுக்கடுக்கான காரணங்களை ரசிகர்கள் அள்ளித் தெளிக்கின்றனர்.

தோனியின் லக் பல கட்டங்களில் இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வெற்றியை தேடித் தந்திருக்கிறது. தோனிக்கு கிடைத்த சூப்பர் பவரோ என்னவோ?? அவர் சொல்வது நிஜமாகவே நிகழ்ந்து அனைவரையும் அசர வைக்கிறது. அப்படி ஐபிஎல் வரலாற்றில் கடந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற சம்பவங்கள், இந்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2020ல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசன் நடைபெற்றது. 8 அணிகள் முட்டி மோதிய அந்த சீசன் சென்னை அணிக்கு ஏமாற்றத்தை அள்ளிக் கொடுத்தது. காரணம் அதுவரை நடைபெற்ற எல்லா சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய தோனியின் படை, 13வது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது குறித்து பேசிய கேப்டன் தோனி, ”நாங்கள் வலிமையுடன் திரும்பி வருவோம்” என்று பேட்டி அளித்தார்.

தோனியின் வார்த்தைகள் 2021 ஆம் ஆண்டில் பலித்தது. வலிமையுடன் திரும்பி வந்த தோனியின் படை 14வது ஐபிஎல் சீசனின் கோப்பையை முத்தமிட்டது. தோனி வாக்கு தவறவில்லை என்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். வந்தது ஐபிஎல் தொடரின் 15வது சீசன். மீண்டும் சிஎஸ்கேவுக்கு ஒரு சரிவு. இந்த ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்காமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

15வது சீசனில் புதிய இரண்டு அணிகள் களம் கண்டன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இரண்டு அணிகளுமே அறிமுக சீசனில் போட்டி அணிகளை கலங்கடித்தன. ஹர்திக் பண்டியாவின் அசத்தலான அணி, கால்பதித்த முதல் சீசனிலேயே கோப்பை தட்டிச் சென்று வரலாறு படைத்தது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, “நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வலுவான அணியாக திரும்பி வர கடுமையாக உழைப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல் மீண்டும் வலிமையுள்ள அணியாக சிஎஸ்கே இந்த ஆண்டு களமிறங்கியது. லீக் போட்டிகளில் பிற அணிகளை துவம்சம் செய்த சிஎஸ்கே, ஐபிஎல் வரலாற்றில் 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை இறுக்கமாகப் பிடித்திருந்த பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை குவாலிஃபயர் 1ல் 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் வரலாற்றில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2020ல் வீழ்ந்து, 2021ல் மீண்டு வந்தது போல, 2022ல் வீழ்ந்த தோனி & கோ, 2023ல் கோப்பையை கைப்பற்றுமா என்ற கேள்வி ஒருபுறம் எல்லா இடத்திலும் சுற்றி வந்தாலும், தோனியின் லக் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் ரசிகர்கள் 2023 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கேவுக்கு தான் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். பலிக்குமா தோனியின் வார்த்தை?? எடுபடுமா தோனியின் லக்?? கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??  காத்திருந்து பார்ப்போம்……

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

”அடிமை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளுங்கள்” – தயாரிப்பு நிறுவனத்திற்கு ’EXO’ உறுப்பினர்கள் நோட்டீஸ்!!

Jeni

இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்; திரைத்துறையினர் இரங்கல்

Yuthi

காபூல் மசூதி குண்டுவெடிப்பில் 21 பேர் பலி

Mohan Dass