குஜராத் மாநிலத்தில் வருடத்திற்கு 2 சிலிண்டர்கள் இலவசம், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி இயற்கை வாயு மீதாக வாட் வரி 10% சதவிகிதம் குறைத்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
குஜராத், கர்நாடகா, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் முடிவடைய உள்ளதையடுத்து விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்வர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 82 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து குஜராத்தில் அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.
அந்தவகையில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி வகை இயற்கை எரிவாயு மீதான மதிப்பு கூட்டு வரியில் 10 சதவிகிதத்தை குறைத்து குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் சிஎன்ஜி விலையில் ஒரு கிலோவுக்கு 7 ரூபாயும், பிஎன்ஜி கிலோவுக்கு 6 ரூபாயும் குறையும் வாய்ப்புள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், இதன் மூலம் குஜராத்தில் உள்ள 38 லட்சம் குடும்ப தலைவிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஎன்ஜி மீதான வாட் வரியை குறைக்கும் நடவடிக்கை மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14 லட்சம் சிஎன்ஜி வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ரூ.1,650 கோடி அரசுக்கு செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







