கோயில் திருவிழாவிற்கு வந்த 2 சிறுவர்கள் மண் எடுக்கப்பட்டு, மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாமரைபாடி அருகே உள்ள கம்மாளபட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், கோயில் அருகே ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு மாவட்டத்தில் பெய்து வரக்கூடிய மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவிற்கு வந்த சிறுவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது தாமரைபாடி ஊரைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் லத்தீஷ் வினி வயது(9) என்ற சிறுவனும், வீரமணி என்பவரின் மகன் சர்வின் வயது (8) என்ற சிறுவனும் சேர்ந்து கோவிலில் மேற்கு புறத்தில் உள்ள நீர் சூழ்ந்திருந்த குட்டையின் அருகே செல்போனில் படம் பிடித்துக் கொண்டு விளையாடிக் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் தண்ணீரில் விழுந்ததுள்ளது, அதனை எடுப்பதற்காக சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கியதாக கூறப்படுகிறது. தண்ணீரில் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த உள்ளனர்.
சிறுவர்கள் தண்ணீரில் இறங்கியதை தொலைவில் இருந்து பார்த்த சிறுமி கோவிலில் இருந்த உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். சிறுவர்கள் உயிரிழந்ததை அறிந்ததும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த உறவினர்களும், ஊரைச் சேர்ந்தவர்களும் உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். சம்பவம் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சிறுவர்கள் நீரில் மூழ்கிய இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர் பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து நமது நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேட்டியளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது, இந்த பள்ளங்கள் வடமதுரை ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குட்செட் குடோனுக்காக மண் எடுக்கப்பட்ட பள்ளங்கள் எனக் கூறினர். இதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம் எங்களுக்கும் இந்த இடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே உடனடியாக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று சிறுவர்கள் இறப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அதோடு இந்த பள்ளம் யாரால் உருவானது ஏன் மூடாமல் விடப்பட்டது என்பதை விசாரணை செய்து, பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால் அதில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது அதனைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தாமரபாடி அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியாகி உள்ளது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.