பழைய கிண்டல் கேலியுடன் இயக்குநர் பாரதிராஜா ஜாலியாக இருக்கிறார் என்றும் அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளது என அவரது மகன் மனோஜ் பாரதிராஜா நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். ராதிகா உள்ளிட்ட பல கதாநாயகிகளைத் தமிழ் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர். அண்மையில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் எம் ஜி எம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். எம் ஜி எம் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜாவின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மற்றும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மருத்துவர்கள் :- பாரதிராஜா மருத்துவமனைக்கு வரும் போது நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆனால் தற்பொழுது அவர் மிகவும் நலமுடன் இருக்கிறார் என்றனர். வயது மூப்பின் காரணமாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது அது சரி செய்யப்பட்டது.சிறிது காலத்துக்கு வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கூறினர். மேலும் கூடிய விரைவில் ஷூட்டிங் செல்ல உள்ளார்.மிக விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார் என்றனர்.

பின்னர் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஐந்து திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்ததால் அலைச்சல் அதிகம் இருந்தது. மேலும் வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது என்றார். தற்போதைய மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் மிகவும் ஆரோக்கியமாக,பழைய கிண்டல் கேலியுடன் ஜாலியாக உள்ளார் என்றும் நமது சினிமா மக்களைப் பார்த்த உடனே நலமாகி விட்டார்.
தொடர்ந்து பாரதிராஜா திரைப்படங்கள் நடிப்பார்.சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.அது முற்றிலும் தவறு.மருத்துவமனைக்குச் செய்யப்பட்ட முழு செலவும் என்னுடைய பணத்தில் மட்டுமே ஆனது. தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.







