ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் ராஜிநாமா செய்து தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அக் கட்சியிலிருந்து 11 பேர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு ஒய்எஸ்ஆர் கட்சியில் இருந்து தலைவர்கள் பலர் வெளியேற தொடங்கியுள்ளனர்.
இதனால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அக்கட்சியில் இருந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பீடா மஸ்தான் ராவ் ஆகியோர் இன்று (ஆக. 29) ராஜிநாமா செய்தனர்.
மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பீடா மஸ்தான் ராவ் ஆகியோரின் ராஜிநாமா கடிதங்களை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார். மேலும், ராஜிநாமா செய்த 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







