கடந்த ஓராண்டில் நாடு முழுவதிலும் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கள் அதிகரித்து உள்ளதா? அப்படியெனில் அதனைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, காய்ந்த இலைகள், மரக்கிளைகள் மற்றும் ஊசி இலை மரக்காடுகளின் காய்ந்த இலைகள் ஆகியவற்றினால் ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினரால் மேற்கொள்ளப்படும் வன ஆய்வு மூலம் தீ விபத்துக்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்,
வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயினை தடுப்பதற்குத் தீயணைப்பு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துதல், வனப்பகுதிகளில் நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், வன உள்கட்டமைப்பைப் பலப்படுத்துதல், தீயணைப்பு கருவிகள் கொள்முதல், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்புப் பணிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமங்கள், சமூகங்களைக் காடுகளுக்கு எதிரான பாதுகாப்பிற்கு ஊக்குவித்தல் போன்ற பணிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘`குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்’
மேலும், நவம்பர் 2019-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2020-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்ளிட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,24,473 காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல் நவம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரை 3,45,989 காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 2021 முதல் ஜூன் 2022 வரை 2,23,333 காட்டு தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019-2020ல் 1,368 தீ விபத்துகளும், 2020-2021ல் 1,220 தீ விபத்துகளும், 2021-2022 ஜூன் வரை 1,035 தீவிபத்துகளும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








