இந்தியாவில் வசிக்கும் புனேவைச் சேர்ந்த 92 வயதான மூதாட்டி 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்று தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மஹாராஸ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் ரீனா சிப்பர் வர்மா. 92 வயது மூதாட்டியான இவருக்குச் சொந்தமான பூர்வீக வீடு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ளது. 1947-ம் ஆண்டில் ரீனாவின் குடும்பம் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 17. இவர் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு சென்றுள்ளதாக நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானிய தூதரகம் நல்லெண்ண நடவடிக்கை மூலம், அந்த மூதாட்டிக்கு 3 மாத கால விசா வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்று முந்தினம் ரீனா புறப்பட்டார்.
இது தொடர்பாக ரீனா தெரிவித்துள்ளதாவது, “பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் எங்கள் குடும்பம் வசித்து வந்தது. நானும் என் சகோதர, சகோதரிகளும் மாடர்ன் பள்ளியில் படித்தோம். எங்களைப் பார்க்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்துள்ளனர். நாங்களும் அவர்கள் வீட்டுக்குச் செல்வோம். இந்தியா – பாகிலஸ்தான் பிரிவினைக்கு முன் ஹிந்து- முஸ்லிம் வேறுபாடு எதுவும் கிடையாது’’ என்றார்.
கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு செல்ல ரீனா விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக அவரால் அனுமதி பெற முடியவில்லை. தற்போது அவர் சென்றுள்ள நிலையில், திரும்பி வருவதற்கு ஏற்றவாறு இரண்டு நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்துவதற்கான பணிகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-ம.பவித்ரா








