குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிய நிலையில், தற்போது வாக்களித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் முதல் வாக்கினைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் முர்முவிற்கு NDA கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவானது; காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். டெல்லி சென்று வாக்களிக்க இயலாத எம்.பிக்கள், மாநிலங்களின் தலைமைச் செயலகத்தில் வாக்களிப்பர். தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்தல் பார்வையாளராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிச் சென்றார். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பி.பி.இ கிட் உடன் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததை அடுத்து, போர் நினைவுச் சின்னம் அருகே திரும்பிச் சென்றார். இந்நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நாசர் ஆகியோர் வாக்கு செலுத்தினர். அப்போது, நாசர் கொரோனா கவச உடையுடன் சென்று வாக்களித்தார்.








