இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மாணவர்கள் புத்தகங்களை பள்ளியிலேயே வைத்து விட்டு வருவதற்கு வசதியாக லாக்கர் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் போதுமான அளவு தண்ணீர் வசதி கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகப் பைகள் அவர்களது உடல் எடையில் 10% மட்டுமே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சரிபார்ப்பதற்காக எடை மிஷின் ஒன்றும் பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.







