ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகள்; அரசு அறிவித்த அதிரடி பரிசு

ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு. ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில்கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம்.…

ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு.

ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில்கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில்தான் தற்போது தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இருவேறு இடங்களில் பேருந்தில் பயணம் செய்த இரு தாய்மார்களுக்கு திடீரென எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்து பணியாளர்களும், பொதுமக்களும் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவி செய்துள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஓரு குழந்தை கடந்த மாதம் 30-ஆம் தேதி நாகர் கர்னூல் அருகே பெத்தகோதபள்ளி கிராமத்தில் பிறந்துள்ளது. மற்றொரு குழந்தை ஆசிபாபாத் அருகே சித்திபேட்டில் பிறந்துள்ளது. இவ்விரு இடங்களிலும், ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, பிறந்தநாள் பரிசாக தெலங்கானா அரசு சூப்பரான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், இந்த 2 பெண் குழந்தைகளும் தங்களது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளும் தற்போது, நலமுடன் இருப்பதாக, தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.