தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 16,888 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று. இதற்காக மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் 21/10/2022 முதல் 23/10/2022 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,518 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 24/10/2022 முதல் 26/10/2022 வரையில், தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,062 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னையில், அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாட்கர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இயக்கப்படும்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதற்கு நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் http://www.tnstc.in போன்ற இனையதளங்கள் மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை(Control Room) 24 மணி நேரமும் செயல்படுத்தப்படுகிறது.
பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள், பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக, 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, தாம்பரம் உள்ளிட்ட 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளன .







