சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்…

சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில் இருந்து 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று ஒரு கொண்டை ஊசி வளைவு போன்ற சாலை திருப்பத்தில் கடந்த போது சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 3 ராணுவ உயர் அதிகாரிகள் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிக்கிம் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், சிக்கிமில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த சோகமான சாலை விபத்து பற்றி அறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன, அவர்கள் விரைவில் குணமடையட்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.