ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 பேர் உயரிழந்த சம்பவம், நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டத்தில் கொரோனாவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரனோ சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதில் கொரோனாவால் 6 நபர்களும், மற்ற 10 நபர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்குள்ள மற்ற நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,950 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 85,196 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.







