தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்……
திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அதனை ஒரு திருவிழா போன்றே நடத்த பலரும் விரும்புவார்கள். அதனால் தான் கடன் வாங்கியாவது தங்களது பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் மெனெக்கெடுக்கினறனர். இதில் வசதி படைத்தவர்களின் இல்ல திருமணங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பல வகையான ஆடம்பரங்கள் அந்த திருமண நிகழ்வுகளில் இருக்கும். மணமகனோ அல்லது மணமகளோ ஹெலிகாப்டரில் வந்திறங்குவது, சாரட் வண்டியில் ஊர்வலம் சென்று சுற்றி இருப்பவர்களை வியப்படைய செய்வது என்று அமர்களப்படுத்தி விடுவர்.
இதில் இன்னொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் இந்த திருமண நிகழ்வுகளில் இடம்பெறும் தாய் மாமன்களின் சீர்வரிசை பொருட்கள் தான். நடுத்தர குடும்பம்பத்தில் உள்ளவர்கள் தங்களால் முடிந்ததை அமைதியாக செய்துவிட்டு போவார்கள். ஆனால் நன்கு வசதி படைத்தவர்களாக இருந்தால் தங்கள் பெருமையை பறைசாற்றும் வகையில் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், பெண் வீட்டாரை மட்டுமின்றி உற்றார், உறவினர்கள், சுற்றத்தார் என அனைவரையும் திக்குமுக்காடவைத்துவிடுவர். இப்படியான நிகழ்வுகளில் பொதுவாக பெண் வீட்டார் அளிக்கும் சீர் வரிசை தான் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு பெண்ணை நிச்சயம் செய்யப்போன மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு தருவதற்காக கொண்டு சென்ற ஒரு சீர் வரிசை ஊர்வலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அருமுளை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற திருந்தையன் என்பவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் சிவகுருநாதன்-லதா தம்பதியின் மகள் தினோஷா என்பவருக்கும் நிச்சயதார்த்த விழா 2 நாட்களுக்கு முன் நடைபெற்றதுது. அப்போது, மாப்பிள்ளையின் சொந்த ஊரில் இருந்து தாம்பூல தட்டுகளில் பல்வேறு வகையான மலர்கள், பழங்கள், பலகார வகைகள் என சுமார் 500 சீர்வரிசைகள் 15 டிராக்டர்களில் எடுத்து செல்லப்பட்டன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாண வேடிக்கை, பட்டாசுகள் முழங்க நீண்ட வரிசையில் வந்த இந்த சீர்வரிசை ஊர்வலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









