5 வருடத்தில் பாதுகாப்புப் படையின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து: அமைச்சர் தகவல்

பாதுகாப்புப்படையின் 15 ஹெலிகாப்டர்கள், கடந்த 5 வருடத்தில் விபத்தில் சிக்கி இருப்பதாகவும் இதில், 31 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ…

பாதுகாப்புப்படையின் 15 ஹெலிகாப்டர்கள், கடந்த 5 வருடத்தில் விபத்தில் சிக்கி இருப்பதாகவும் இதில், 31 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8 ஆம் தேதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோசமான வானிலை காரணமாக, பிபின் ராவத் உட்பட ராணுவ வீரர்கள் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர், மேகமூட்டத்திற்குள் சிக்கி விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது. இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் மக்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ ஹெலிகாப்டர்களின் விபத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை முப்படைகளுக்கு சொந்தமான 15 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் கடந்த 8-ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும் என்றும் சொன்னார்

இதில் ராணுவம் மற்றும் விமானப்படையில் இருந்து தலா 7 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் ஒரு ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இந்த விபத்துகளில் 31 வீரர்கள் உயிரிழந்திருபப்தாகவும் 20 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.