ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு அந்தியூர் அடுத்த பாலமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள குருவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவரது விவசாயத் தோட்டத்தில் கால்நடை தீவனப்பயிர் சோளம் அறுவடையில் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுருந்தனர். சோளப் பயிர்களுக்கு மத்தியில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட கூலித் தொழிலாளர்கள் அலறி அடித்து வயலை விட்டு வெளியேறினர்.
இதை தொடர்ந்து விவசாயி ஈஸ்வரன் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த சென்னம்பட்டி வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு லாவகமாக விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பினை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர்.
கால்நடை மருத்துவர் செய்த மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வனப்பகுதிக்குள் மலைப்பாம்பை பத்திரமாக விட்டுச் சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடை காலத்தில் தீடீரென பெய்த மழையினால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலையின் காரணமாக இது போன்று அவ்வப்போது மலை பாம்புகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களுக்கு வருவது இயல்பு என தெரிவித்தனர்..
-சௌம்யா.மோ







