“142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

 142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.…

 142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்கிறார். மோடி தனிமனிதன் என்கிறார். 142 கோடி மக்கள் நாம் தான் மோடியின் குடும்பம். கோபாலபுர குடும்பத்தையும் நான்காவது தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் திமுகவின் சிற்றரசர்களையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டியது நேரமிது. இந்தத் தேர்தல் நமக்கு அருமையான வாய்ப்பு.

அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் முக்கியமான நாட்கள்; பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை தயார் செய்து வைத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார்; இந்தியா முழுவதும் 400 சீட்டுகளை வெல்லவும் தமிழ்நாட்டிலிருந்து 39 எம்பிக்களை கொடுக்கவும் இந்த மைதானம் சாட்சியாக இருக்கட்டும்” என பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.