குடும்பத்தினருடன் பேருந்தில் பயணித்த 14 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் செபஸ்டின் ராஜ். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொற்செல்வி, மகள் அனுஷ்யா, மகன் ஆண்டனி ஜானி ரோஷன். பொற்செல்வி தனது மகள் அனுஷ்யா மற்றும் 14 வயது மகன் ஆண்டனி ஜானி ரோஷன் உடன் ராஜபாளையத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு பேருந்தில் சென்னைக்கு மூவரும் ஒன்றாக திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் விக்கிரவாண்டி தாண்டி பஸ் வரும்போது தொடர்ச்சியாக ஆண்டனி ஜானி ரோஷன் வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். உடனடியாக அவரை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். ஆண்டனி ஜானி ரோஷனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் அவரது சகோதரி கதறி அழுதனர். இது குறித்து திண்டிவனம் டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.







