குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் 13 வயது மகள் தரணி. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தரணி தனது அக்கா அஸ்வினியுடன், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது மாமா விக்னேஷ் வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார். மாலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தரணி, வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.

டோகிட்டோ கோலா ((Togito cola)) என்ற குளிர்பானத்தையும், ரஸ்னாவையும் தரணி வாங்கி அருந்தியதாக தெரிகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளியும் வெளியேறியதாகவும், உடல் நீல நிறத்திற்கு மாறியதாகவும் தெரிகிறது.

தரணியின் நிலையைப் பார்த்து பயந்துபோன தரணியின் அக்கா அஸ்வினி, வெளியே சென்றிருந்த மாமாவுக்கும் உறவினர்களுக்கும் தகவல் அளித்துள்ளார். பதறிக்கொண்டு வந்த உறவினர்கள், உடனடியாக சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு, சிறுமி தரணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து, சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு, சிறுமியின் உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுமி குடித்ததாக கூறப்படும் குளிர்பானங்களின் மாதிரிகளை போலீசார் கைப்பற்றி, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே, சிறுமியின் மரணத்திற்கு, அவர் குடித்த குளிர்பானம் காரணமா என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், முதற்கட்ட சோதனையில், சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, சிறுமி குடித்த குளிர்பானம், கடந்த ஆண்டே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, சிறுமி குளிர்பானம் வாங்கிய கடையில், தரமற்ற உணவுப் பொருட்களும், காலாவதியான உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.