எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் படகுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். விசைப்படகில் கீழகாசாகுடிமேடு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம் போல் கோடியகரைக்கு தென்கிழக்கு பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். நாளை காலை திருகோணமலை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கீழக்காசாக்குடி மேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று இலங்கை நீதிமன்றத்தால் 10 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதே நாளில் 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








