நெல்லை அருகே கோயிலின் பூட்டை உடைத்து, 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் அய்யா கோயில் உள்ளது. வழக்கம் போல் நேற்றிரவு கோயிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் அவர், கோயிலினை திறக்க வந்தபோது, பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, ஊர் மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கோயிலின் சிசிடிவி காட்சியை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், அதிகாலை முகத்தை மறைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், கோயிலிருந்த நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 சவரன் தங்க நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழவூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







