பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக் கழங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அதில், உயர் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
அதில், மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள், நிர்வாக செயல்பாடுகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பல்வேறு குளறுபடிகளை மாற்றியமைத்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே மாதிரியான முறையை வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
எம் ஃபில் வேண்டுமா? வேண்டாமா? என்ற இருவேறு கருத்துகள் இருந்தாலும் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்கக் குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டும் ஒற்றைச்சாளர முறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலமாக பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.







