புதுச்சேரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேர் காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்ற நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 253 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் மொத்தம் 14,129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோரிமேடு காவலர் மைதானத்தில் நடந்தது.
இதில், ஆண்கள் 2,091 பேரும், பெண்கள் 1,016 பேர் என மொத்தம் 3,107 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 4 ஆம் தேதி 9 மையங்களில் நடந்தது. இத்தேர்வினை 3,068 பேர் எழுதியதைத் தொடர்ந்து விடைத்தாள்களைத் திருத்தி இடஒதுக்கீடு வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 9 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 11 பேர் காவலர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சற்குணம், அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி என்பதும் விக்ரமன் என்பவர் 120. 25 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடமும், தருண் குமார் 119.75 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த இவர்களை, அவரின் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் சால்வை அணிவித்து கேக் மற்றும் இனிப்புகள் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால், புதுச்சேரி மாநிலம் மண்ணாடி பட்டு தொகுதியில் உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் போலீஸ் பணியிடங்கள் அதிகம் பேர் உள்ள கிராமமாக மாறியுள்ளது. இங்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு போலீஸ், ஐ.ஆர்.பி.என்., தீயணைப்பு வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: