பாம்பு கடித்து சாலை வசதியில்லாததால் உயிரிழந்த குழந்தை – சாலை அமைக்க முன்னேற்பாடுகள் தீவிரம்!

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் பாம்பு கடித்து போதிய சாலை மற்றும் மருத்துவ வசதியின்றி ஒன்றரை வயது குழந்தையின் உயிரிழந்தை அடுத்து தற்போது சாலை அமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.  வேலூர் மாவட்டம்…

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் பாம்பு கடித்து போதிய சாலை மற்றும் மருத்துவ வசதியின்றி ஒன்றரை வயது குழந்தையின் உயிரிழந்தை அடுத்து தற்போது சாலை அமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்திமரத்துக் கொல்லை பகுதியைச் சேர்ந்த விஜி – பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா, கடந்த மாதம்  27ஆம் தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்குக் கையால் சுமந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்குச் சாலை அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைவுப்படுத்தியுள்ள நிலையில், முதல் கட்டமாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை அமைக்கப்பட உள்ள இடங்கள் அளவீடு செய்யப்பட்டது.
பின்னர் அது மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இதற்கு இடையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 5 கிலோ மீட்டர், சுமார் 3.2 ஹெக்டேர் அளவுக்கு சாலை அமைக்கப்பட வேண்டி உள்ளதால், அதற்கு மாற்றாக வருவாய்துறை சார்பில் வனத்துறைக்கு இரண்டு மடங்கு அதாவது 6.4 ஹெக்டேர் நிலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்ட இடத்தில் மிகப் பெரிய மரங்கள் பாறைகள் மற்றும் புதார்கள் இருப்பதால், அதனைத் துல்லியமாக அளவிடுவதற்கு அரசின் நில அளவை பிரிவில் போதிய மேம்படுத்தப்பட்ட கருவிகள் இல்லாததன் காரணமாக, வேலூரில் உள்ள தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உதவியுடன் சுமார் 50 லட்சம் மதிப்புடைய ஜி.பி.எஸ் கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து நேற்று வேலூர் தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அல்லேறி மலைப்பகுதியில் முதற்கட்ட ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், வருவாய்த் துறையின் செக் பந்தி அளவீடுகள் தற்போது வரை தென்படாததாலும், மலைப்பகுதியில் போதிய இணையதள வசதிகள் இல்லாததாலும், இப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஜி.பி.எஸ் கருவி மூலம் நிலம் அளவீடு செய்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.