ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் – மத்திய அரசு தகவல்!

11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய…

11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய அனைத்து தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. ஒரு நபர் பல்வேறு பான் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. விரல் ரேகைப் பதிவு, கண் விழித்திரை பதிவு மூலம் ஆதார் எண் வழங்கப்படுவதால் ஒருவர் ஒரு ஆதார் மட்டுமே பெற முடியும். இதனால் அது தனிமனிதர்களின் உறுதியான அடையாள ஆவணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மக்களவையில் பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு பான்-ஆதார் இணைப்பவர்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கடந்த ஜன. 31-ம் தேதி வரை ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 11.48 கோடி பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.