10, 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12-ம்…

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவர்களும், 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தலா 8 லட்சம் மாணவர்களும் எழுதினர்.

இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் 60,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும், பின்னர் 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராகவும், கணினி ஆப்பரேட்டர்கள் 2 அணியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து, விடைத்தாள்களை முதன்மை தேர்வாளர் மட்டுமே பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் தமிழ், ஆங்கிலம் பாட விடைத்தாள்களை காலை 15, பிற்பகல் 15 என்று ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் இயற்பியல், வேதியியல், கணித பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என்று ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

திருத்தி முடித்த விடைத்தாள்களை மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அங்கு மதிப்பெண்களின் கூடுதல் விபரம் சரிபார்க்கப்பட்டு, கணினி ஆப்பரேட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், மதிப்பெண்களை சரியாக கணக்கிட வேண்டும் என்றும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் இருந்தால் மதிப்பெண் வழங்கும் விதம் மாணவர்களின் நலன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் கவனித்து திருத்த வேண்டும் என்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின் வரும் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், வரும் 17-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ஜூலை 7-ல் 11-ம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.