வைகை எக்பிரஸ் ரயில் தேனி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் முழுவதும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் முதல் சோதனை ஓட்டமாக மூன்று நாட்களுக்கு தேனி வரை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தேனி வரை இயக்கப்படும் என்ற தகவல் குறித்து தற்போது வரை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை.
இனிவரும் காலங்களில் ஏதேனும் திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் தெற்கு ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பயணிகள் இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இது போன்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பகிர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.








