தூய்மை பணியாளர்கள் போராட்டம் நிறுத்தம்

மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.  மதுரையில் தூய்மை பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை…

மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 

மதுரையில் தூய்மை பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என காலவரையில்லா வேலை நிறத்தப் போராட்டத்தில் 6000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் 1,600 டன் குப்பைகள் தேக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்தும், 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாநகராட்சி எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்தும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தூய்மை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் தேக்கமடைந்த குப்பைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின்பு இன்று தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்யுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.