நூறு ரூபாய் கூடுதலாக கூலி வாங்கிய ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்து விட்டு, மது போதையில் தவறி விழுந்து உயரிழந்தாக நாடகமாடிய அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ஆனந்தன் என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருடன் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து ஆனந்தன் கீழே தவறி விழுந்ததாக கூறி அவரது நண்பர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் ஆனந்தனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது நண்பர்களான சக்திவேல், பிரசாந்த், கொத்தனார் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தன், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து உள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல், பிரசாந்த் ஆகியோரை விட ஆனந்தன் நன்றாக வேலை செய்து உள்ளார். இதனால் அந்த கட்டிடத்தின் மேஸ்திரி ஆறுமுகம், ஆனந்தனுக்கு கூடுதலாக 100 ரூபாய் கூலி கொடுத்துள்ளார். அப்போது இருவரும், ஆனந்தனிடம், “நீயும் எங்களை போல் வேலையை பொறுமையாக செய். உன்னால் மேஸ்திரி எங்களை அவமானப்படுத்துகிறார்” என கூறி உள்ளனர். ஆனால் ஆனந்தன் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர்கள் இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்னை இருந்துள்ளது.
இதனால் ஆனந்தனை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி தண்டீஸ்வரன் நகரில் உள்ள அந்த கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்த ஆனந்தனை வரவழைத்துள்ளனர். இதையடுத்து ஆனந்தனுடன் சக்திவேல், சீனிவாசன், பிரசாந்த் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். ஆனந்தனுக்கு போதை ஏறியதும் பக்கத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து இளநீர் பறிக்க சொல்லியுள்ளனர்.
அவர் தென்னை மரத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது மூன்று பேரும் சேர்ந்து ஆனந்தனை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்து உயிரிழந்த ஆனந்தனை, மதுபோதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.









