தமிழ்நாட்டில் சேதமடைந்த பள்ளி கட்டடங்களை அகற்ற ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்துள்ளது.
மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி மற்றும் அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்களே அதிகமாக உள்ளது. சமீபகாலமாக பல பள்ளிகளில் மேற்கூரை மற்றும் கட்டடங்கள் மிகவும் மோசமாக, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் பள்ளியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3,030 சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அகற்றப்பட உள்ளது.
மேலும், 3,745 கோடி ரூபாய் நபார்டு கடன் திட்டத்தின் மூலம் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 106 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.








