ஆன்லைன் வர்த்தகம் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இளைஞரை மும்பை சைபர் கிரைம் சிஐடி போலீசார் நாகர்கோவில் அருகே வைத்து கைது செய்தனர்.
மும்பையை சேர்ந்தவர் ராஜா. இவர் மலேசியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் மும்பை, மலேசியா, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒரு
கும்பலை வைத்து ஆன்லைன் மூலம் வர்த்தக மோசடியில் ஈடுபட்டு வந்ததாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து மும்பை சைபர் கிரைம் சிஐடி போலீசாரின் விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டுவிளைவு பகுதியில் பிரின்சாரம் (வயது 30) என்பவர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இன்று மும்பையில் இருந்து சைபர் கிரைம் சி ஐ டி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டிக்கு வந்தனர்.
பின்னர் அங்குள்ள காவல் ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் போலீசாரின் துணையுடன் திட்டுவளை குருசடியில் வீட்டில் இருந்த பிரின்சாரத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் ஒவ்வொரு ஊரிலும் ஆட்களை வைத்து சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரின்சாரத்தை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, விசாரணைக்காக அவரை போலீசார் மும்பை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








