ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி விலை உயர்வு போன்ற எதிர்க்கட்சிகளின் ஆணித்தரமான கேள்விகளுக்கு பாஜகவால் பதில் சொல்ல முடியாது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்யமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜிஎஸ்டி வரி உயர்வு ஏழைகளைப் பாதிக்காது என மத்திய நிதியமைச்சர் பொய் சொல்லியுள்ளதாகக் கூறிய அவர், எப்படி பாதிக்காமல் போகும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக அரசு 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. ஆனால், கடந்த 52 ஆண்டுகளில் சுதந்திர தினமே பாஜக கொண்டாடவில்லை ஏன் கொண்டாடவில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏன் இவ்வளவு நாளாகக் கொண்டாடவில்லை என்பதற்ககாண காரணத்தைச் சொல்ல வேண்டும் எனவும், அழகிரிக்கு எதுவுமே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருப்பதாகத் தெரிவித்த அவர், அண்ணாமலை போல் 20 ஆயிரம் புத்தகங்களைப் படிக்கவில்லை எனக் கூறினார்.
நீட் தமிழ்நாட்டில் வேண்டாம் என்று சொல்லும் உரிமை முதலமைச்சருக்கு இருக்கிறது எனத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய நீட் மசோதாவை ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பியதே தவறு. முதலில் அண்ணாமலை அரசியல் சட்டத்தைப் படிக்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சில நாகரீகங்கள் கருதி நீதித்துறையில் இருப்பவர்கள் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தவில்லை எனவும், எஜமான தத்துவத்தை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஆணித்தரமான கேள்விகளுக்கு பாஜகவால் பதில் சொல்ல முடியாது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பாடகர் கைது!’
ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டம் தோறும் 75 கிலோ மீட்டர் நடைப் பயணம் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எனவும், செக்கிழுத்தவர்கள், சிறை சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எனக் குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ்-ல் யாரையாவது சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.








