உங்கள் வரிப்பணத்தில் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம். உங்கள் உயிரைப் பாதுகாக்கவில்லை என்றால் எதற்காக நாங்கள் போலீசாக இருக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் கேள்வி எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்து பேலீசார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இம்மாதம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கச் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் குகை பிரதான சாலையில் செவ்வாய் பேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தனர். அவர்கள் அனைவரையும் நிறுத்திய போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அப்போது பேசிய காவலர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் அன்றாடம் எவ்வளவு விபத்து நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மருத்துவமனையில் வந்து பாருங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் கதறல் சத்தத்தை, உங்களுக்கு அப்போதுதான் தெரியும் எனப் பேசினார். மேலும் நீங்கள் கட்டும் வரிப் பணத்தில் தான் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம், உங்கள் உயிரைக் காப்பாற்றவில்லை என்றால் எதற்காக நாங்கள் பணியில் இருக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் கூறினார்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது குழந்தைகள் மற்றும் பெண்கள் வாகனம் ஓட்டுபவரைக் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூற வேண்டும் எனத் தெரிவித்த அவரின் கோரிக்கையை ஏற்ற அனைத்து வாகன ஓட்டிகளும் இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்க மாட்டோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து காவலர்கள் வாகன ஓட்டிகள் அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.