அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் பெற்ற குடும்பத்தினருக்கு ரூ .1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என மிசோரம் அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட்டே அறிவித்துள்ளார்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டதன் மூலம், ஐசால் கிழக்கு -2 தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ராபர்ட், மிசோரம் மக்கள் அதிக நபர்கள் கொண்ட பெரிய குடும்பங்களாக வாழ வழிவகை செய்யும் வகையில், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எனினும், அதிகபட்சமாக எத்தனை குழந்தைகள் பெற்றிருக்க வேண்டும் என்பதனை அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
“மிசோரமின் மக்கள்தொகை அடர்த்தி, சதுர கி.மீ.க்கு 52 நபர்கள் என மிகக் குறைவாகவே உள்ளது. கருவுறாமை மற்றும் குறைந்த மக்கள் தொகை ஆகியவை பெரும் கவலையளிப்பதாக உள்ளது என ராபர்ட் ரோமாவியா ராய்ட் தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையை தனது மகனுக்குச் சொந்தமான நார்த் ஈஸ்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் வழங்கும் எனவும் அமைச்சர் ராபார்ட் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரம் 10.91 லட்சம் மக்கள் தொகையோடு இந்தியாவின் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது.
38 மனைவிகள், 89 குழந்தைகள் மற்றும் 33 பேரக்குழந்தைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவரான சியோனா சானா ( 76 வயது ) மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.







