திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
மதுரையில் விவசாயிகளைச் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து குஷ்பு விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் மட்டுமே போராட்டங்கள் நடைபெற்று வருவதாக கூறினார். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளதாக குறிப்பிட்ட குஷ்பு, விவசாயிகள் வாழ்வில் எதிர்க்கட்சிகள் விளையாட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் தான் விவசாயிகள் போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினிகாந்த் பற்றி ஸ்டாலின் மறைமுகமாக தாக்கியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை குஷ்பு, ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும் என்று கூறினார்.







