திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள வார்டு ஒன்றில் திமுக பிரமுகர் கள்ள ஓட்டு போடவந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அவரை தாக்கி அரை நிர்வாணமாக அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். நேற்று முன்தினம் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே தேர்தலன்று ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்றுநோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். மேலும், ஜெயகுமார் ஜாமின் வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காலை 10:30 மணிக்கு விசாரணை வருவது குறிப்பிட தக்கது.








