முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 26.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதை அடுத்து, 129.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21,504 பயனாளிகளுக்கு முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் அரசைத் தேடி வருவதற்குப் பதிலாக, முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் அரசே மக்களை தேடிச்சென்று குறைகளை தீர்த்து வருவதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
ஆய்வு கூட்டங்கள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசினார். வயதான காலத்தில் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறிய முதலமைச்சர், மக்களை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கூறும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என தெரிவித்தார். மேலும் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என்று விமர்சித்தார்.
அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்காக பாடுபட்ட சுகாதாரத்துறை உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். முன்னதாக 8 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து 4 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.







