தமிழகத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டதால் மத்திய பாஜக அரசை தூக்கி எறியும் காலம் மிக விரைவில் வரும் என கூறினார். மேலும், பாஜக-அதிமுக கூட்டணி பலமா பலவீனமா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும் என தெரிவித்த அவர், பாஜகவுடனான கூட்டணி அதிமுகவின் வெற்றியை பெரும் அளவில் பாதிக்கும் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சிவாஜியே அரசியலில் தோல்வியை தழுவிய நிலையில், இப்போது உள்ள நடிகர்கள் அனைவரும் தன்னை எம்ஜிஆரை போல நினைத்து கொள்கின்றனர் என விமர்சித்தார்.







