மத்திய அரசுடன் 5வது கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் விவசாயிகள் 10வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசுடன் 4 முறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும், உடன்பாடு எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விவசாயிகளோ சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். எனவே இன்று நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேளை இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத பட்சத்தில் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிடுவது என்பதும், அனைத்து சுங்கசாவடிகளையும் முடக்குவது என்பதும் விவசாயிகளின் திட்டமாக இருக்கிறது. போராட்டத்தின் ஒரு கட்டமாக வரும் செவ்வாயன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே போராட்டத்தின் அடுத்த கட்டம் என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது.







