ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்ற எதார்த்த உண்மையைத்தான் அழகிரி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பாஜக தேர்தலுக்கான ஆதரவு கேட்கிறது என்று கூறினார். அதன் அடிப்படையில் நல்லவரும், செல்வாக்கு மிக்கவருமான ரஜினிகாந்திடமும் ஆதரவு கேட்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகியான அருணாச்சலமே பாஜகவில் சேர்ந்துள்ளார் என்றும், மேலும் பலர் அக்கட்சியில் இருந்து பாஜகவில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார். வேளாண் சட்டத்திற்கு எதிராக மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார் என விமர்சனம் செய்த ஹெச்.ராஜா, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல்துறையை கேட்டுக்கொண்டார்.







