சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா கிருஷ்ணனின் வீடு சில நாட்களாக பூட்டிக் கிடந்த நிலையில், துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் சந்தேகாடைந்து வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அவரது மனைவி கல்பனா தூக்கில் தொங்கிய நிலையிலும், மூத்தமகள் கட்டிலிலும் இறந்து கிடந்தனர். சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இரண்டு கடிதங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கோதண்டபாணி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் லோன் வாங்கித் தருவதாக மோசடி செய்து விட்டதாகவும், இதனால், ஏற்பட்ட கடன் தொல்லையால் உயிரிழப்பு செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இளைய மகளுடன் மாயமாகியிருந்த கீதா கிருஷ்ணனை தேடி வந்த போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டது. விசாரணையில், கடன் தொல்லையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாங்களும் உயிரிழப்பு செய்துகொள்ள முடிவு செய்ததாகவும், அதன்படி, மூத்த மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, மனைவி உயிரிழப்பு செய்து கொண்டதாக கீதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இளையமகளை பார்த்து மனம் மாறிய தாம், குழந்தையுடன் திருப்பதி சென்றுவிட்டதாகவும், நண்பரிடம் பணம் வாங்குவதற்காக மீண்டும் சென்னை வந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







