சென்னையில் தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சிபிஐ பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், இந்த தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனம் பல வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த தனியார் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ வசம் இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது 400.47 கிலோ தங்கத்தில், 103.81 கிலோ தங்கம் குறைவாக இருந்தது. இதுதொடர்பாக சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரி ஒருவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில் சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரி தலைமையில் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சி.பி.ஐ. தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ஐ தலைமையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







