வேளாண்மை சீர்திருத்தங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கக் கூடியவை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காணொலி காட்சி வழியே நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 93 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மை மற்றும் அதன் உபதொழில்களில் உள்ள தடைகளை அகற்றக் கூடியது என்று கூறினார். ஒரு துறை வளரும்போது அதன் தாக்கம் பல துறைகளில் எதிரொலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு துறைகளுக்கு இடையே தேவையற்ற சுவர் இருந்தால், எந்த துறையும் விரைவாக வளர்ச்சியடைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயம் சார்ந்த உபதொழில்களான வேளாண் கட்டமைப்புகள், உணவுப் பதப்படுத்துதல், சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றுக்கு இடையே தடையாக பல சுவர்கள் இருந்த தாக கூறியுள்ள அவர், அந்த சுவர்கள் எல்லாம் இப்போது நீக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை, தொழில்நுட்ப முன்னேற்றங்களை, முதலீடுகளைக் கொடுக்கும் என்றும், இது எல்லாவற்றிலும் விவசாயிகள்தான் பலன் பெறப்போவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.







