தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த விவேக்கின் மகள்!

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு இறுதி சடங்கு செய்து, அவரது உடலுக்கு மூத்த மகள் தீ மூட்டியுள்ளார். 59 வயதான நகைச்சுவை நடிகர் விவேக், 1980களின் இறுதியில் இயக்குநர் பாலச்சந்தர்…

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு இறுதி சடங்கு செய்து, அவரது உடலுக்கு மூத்த மகள் தீ மூட்டியுள்ளார்.

59 வயதான நகைச்சுவை நடிகர் விவேக், 1980களின் இறுதியில் இயக்குநர் பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 80களின் இறுதியில் அறிமுகமாகியிருந்தாலும், சினிமாவின் கால பரிணாமத்திற்கு ஏற்ப தனது பாணியையும் மாற்றிக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டவரானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவேக், மக்கள் தமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ, எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனையிலிருந்து தகவல்கள் வெளிவந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தது அனைவர் மத்தியிலும் எதிர்மறையான கருத்தை உருவாக்கிவிட கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசிக்கும் அவரது மரணத்திற்கும் தொடர்பு இல்லையென தெரிவித்தார். இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான் முதலில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து இன்று மாலை அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மேட்டுக்குப்பம் மின் மயானம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தமிழக காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவரது இரு மகள்களில் மூத்த மகளான தேஜஸ்வினி குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் விவேக்கின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து, உடலுக்கு தீ மூட்டினார்.

இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரிதும் கவனிக்கப்படுவதாக மாறி வருகிறது. திரையில் மட்டுமல்லாது தனது குடும்பத்திலும் முற்போக்குக்கான விதையை விதைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் எழுதி வருகின்றனர்.

முன்னதாக அவரது மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.