வடமேற்கு ஜப்பானில் கடந்த 2 நாட்களாக வீசி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலைகளில் சிக்கித்தவித்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வடதுருவத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பூமத்திய ரேகைக்கு மேல் உள்ள நாடுகளில் குளிர் வாட்டத்தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக ஜப்பானின் வடமேற்கு மாகாணங்களில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. புதன்கிழமை மாலை தொடங்கிய பனி, சாலையில் பல போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் மேற்கில் 10,000 க்கும் மேற்பட்ட வீடுகளை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனெட்சு அதிவேக நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடங்களில் பல நெரிசல்கள் இருப்பதாக அந்நாடு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இதனிடையே பனிப்பொழிவால் நெடுஞ்சாலைகளில் சிக்கித்தவிக்கும் வாகனங்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு தேவையான உணவு, உடைகளையும் வழங்கி வருகின்றனர். இதனிடையே ஜப்பான் கடலோரப் பகுதியில் வார இறுதியில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைத்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.







