சேலம் அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக, 100 பலூன்களை ஊதி சாதனை புரிந்துள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தாடிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கராத்தே வீரர் உலக கின்னஸ் சாதனையாளர் நடராஜன். அப்பகுதியில் பாரம்பரிய கலை பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் சமூக ஆர்வலர் செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அதனைதொடர்ந்து உலக சாதனையாளர் கராத்தே நடராஜன் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 97வது சாதனையாக மூக்கு வழியாக 19 நிமிடத்தில் 100 பலூன்களை ஊதி சாதனை படைத்தார். இதன்மூலம் வேர்ல்ட் சூப்பர் டேலண்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பில் இடம் பிடித்துள்ளார்.
பிராணயாமா மூச்சுப்பயிற்சி மூலம் கொரோனா போன்ற கொடிய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே இதுபோன்று மூக்கின் வழியாக பலூன்களை ஊதி சாதனை நிகழ்த்தி உள்ளதாகவும் கராத்தே நடராஜன் விளக்கமளித்தார். இவர் ஏற்கெனவே தலைமுடி, மீசை முடியால் காரை கட்டி இழுத்தல், மீசை முடியால் கேஸ் சிலிண்டரை தூக்குதல் போன்ற பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது கராத்தே வீரர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உலக சாதனையாளர் நடராஜனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.







