புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 6 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திரிகோணமலையில் கரையை கடந்து தமிழகத்தின் பாம்பன் பகுதியை நெருங்கியது. இந்நிலையில், நேற்று மன்னார் வளைகுடா கடல்பகுதியில் புரெவி புயல் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை இன்னும் சில மணிநேரங்களில் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் புயலின் தாக்கத்தால், சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதீத கனமழையும் (20செ.மீ அதிகம்) இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







