உடுமலை அருகே குப்பைகளை கொட்டுவதில் ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குப்பைகளை ஊராட்சி தலைவர் சாலையில் கொட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூர் பேரூராட்சியை ஒட்டி ஜோத்தம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை கணியூர் பேரூராட்சி பகுதிக்குள் கொட்டி வந்தனர். இதற்கு கணியூர் பேரூராட்சி தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நேற்று ஜோத்தம்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் கணியூர் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மடத்துக்குளம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் குப்பை கொட்டப்படும் இடங்களை ஆய்வு செய்தனர்.
இன்று அதிகாரிகள் முன்னிலையில் சிறிதும் பொருட்படுத்தாமல் ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலைகளில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். தனது ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அடுத்த பகுதிக்கு கொண்டு செல்வது முறையல்ல என்று பொதுமக்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூறியும் இது போன்ற பொதுமக்களுக்கு இடையூறான செயல்களில் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







